

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'வாரணாசி'. சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தியா மட்டுமின்றி கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா உள்ளிட்ட பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அண்டார்டிகாவிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புராணம் மற்றும் கற்பனை அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, படத்தின் தற்போதைய நிலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "வாரணாசி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். குறிப்பாக கதையின் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான அதிரடி சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது காட்சிகளை இணைக்கும் சில முக்கியமான பகுதிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். வரும் செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் தொடக்கத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்று நம்புகிறோம்," என்றார்.
ராஜமவுலியின் இந்த அப்டேட்டால் 'வாரணாசி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.