பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது.


பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்
Published on

பெங்களூரு,

இசையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருந்த பின்னணி பாடகி ஜமுனா ராணி நேற்று காலமானார். இவரது மறைவால் தென்னிந்திய இசை உலகம் சிறந்த ஒரு குரலை இழந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகின் மூத்த பின்னணிப் பாடகியான ஜமுனா ராணி (வயது 88), நேற்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள்

1938-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது 7-வது வயதிலேயே 'தியாகய்யா' திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்த குரல்

தமிழில் 1952-ம் ஆண்டு வெளியான 'கல்யாணி' திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ஜமுனா ராணி, 'காளை வயசு கட்டான சைசு', 'பாட்டொன்று கேட்டேன்', 'சின்னச் சின்ன சிட்டு', 'காவேரி தாயே', 'யாரடி நீ மோகினி', 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே', 'மாமா மாமா' உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com