ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஹாலிவுட் நடிகரின் மகள்

போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் நடிகை விக்டோரியா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாமி லீ ஜோன்ஸ். மென் இன் பிளாக் படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார்.
இந்நிலையில் இவரது மகளும் நடிகையுமான விக்டோரியா ஜோன்ஸ் (34), சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவின் நோப் ஹில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேர்மாண்ட் ஓட்டலின் 14-வது மாடியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விக்டோரியா ஜோன்ஸ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு சிபிஆர் செய்தும் பலனில்லாமல் போனது. தகவலறிந்து அங்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சான் பிரான்சிஸ்கோ போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் எந்தவித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை விக்டோரியா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






