கடைசி படம் என்பதால் விஜய் பில்டப் செய்கிறார்: சபாநாயகர் அப்பாவு

‘ஜனநாயகன்’ விவகாரத்தை தேவையில்லாமல் விஜய் பெரிதாக்குவதாக சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார்.
நெல்லை,
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக சென்சார் சான்றிதழ் (தணிக்கைச் சான்று) வழங்கப்படவில்லை. இந்த படத்தை மறுஆய்வுக் குழு பார்ப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை ஐகோர்ட்டு தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை திரைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ விவகாரத்தை தேவையில்லாமல் விஜய் பெரிதாக்குவதாக சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, அப்போது கூறியதாவது:
“ஜனநாயகன் தனது கடைசி படம் என்பதால் விஜய் பில்டப் செய்கிறார். ரசிகர்களை கொதிநிலையில் வைத்திருக்க இந்த பில்டப் செய்யப்படுகிறது. ஆந்திராவில் சினிமா படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த விவகாரத்தில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகியுள்ளனர். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.






