

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. கார் பந்தயம்
அதன்படி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடந்த சனிக்கிழமை சென்றார். அங்கு அஜித் பங்கேற்ற மிக்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன. இந்த பந்தயத்தில் அஜித் அணி 38-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில், சில்வர் ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்துடன் இருந்த வீடியோவை முதல் அமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2.53 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், ரேஸ் கார்கள் குறித்து அங்குள்ள ஒருங்கிணைப்பாளர்களிடமும், வீரர்களிடமும் ர் விஜய் கேட்டறிந்தார். பின்னர், அஜித்துடன் சேர்ந்து ரேஸ் கார் மாதிரியை விஜய் ஓட்டிப் பார்த்துள்ளார். மேலும், வீரர்கள் அணியும் கவச உடையை அணிந்து கொண்டு (ஜோசப் விஜய் என்ற பெயருடன்) அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
அப்போது, இருவரும் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முதல்வர் விஜய்க்கு கார் பற்றியும், கார் பந்தயம் குறித்தும் அஜித் குமார் விளக்கிக் கூறியுள்ளார். இறுதியில் இருவரும் தேசியக் கொடியை ஏந்தி போட்டோ எடுத்துக் கொண்டனர். கார் பந்தயத்தை துவக்கி வைத்தது, அஜித்குமார் கார் சீறிப்பாயும் போது கையை உயர்த்தி உற்சாகமூட்டியது என சில்வர் ஸ்டோனில் விஜய்யின் மகிழ்ச்சியான தருணங்கள் அந்த வீடியோவில் இடம்பிடித்துள்ளன. இந்த வீடியோ தற்பொது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.