உலகத்தரம் வாய்ந்த நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடித்துள்ள ‘டிரெயின்’ படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் மிஷ்கின் பாராட்டு
Published on: 

விஜய் சேதுபதி சிறப்பான நடிப்பை ‘டிரெயின்’ படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிரெயின்’. தாணு தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியை தவிர்த்து நாசர், சுருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மிஷ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் ஒரு வழியாக டிசம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் திரில்லர்

‘டிரெயின்’ திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட டார்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது

இந்த நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் டோரதி பட நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் விளம்பர பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்வில் பேசிய மிஷ்கின் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது, “இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த படம் கிடையாது. ஒரு வேகமாக ஓடக்கூடிய விறுவிறுப்பான திரில்லர். குடும்பத்தோடு எந்த விரசமும் இல்லாமல் பார்க்கூடிய ஒரு படம். வன்முறை இல்லை, ஆனால் பயங்கரமான சண்டைக் காட்சிகள் இருக்கிறது. நான் வளர்ந்த காலத்தில் முரட்டுக்காளை படத்தில் வரும் டிரெயின் சண்டைக் காட்சியை பார்த்து மிரண்டிருக்கிறேன். அதன் பிறகு செந்தூரப்பூவே படம். அந்த இரண்டு படத்தையும் இதில் தாண்டி இருக்கிறேன் என நினைக்கிறேன்” என்றார். பின்பு விஜய் சேதுபதி குறித்து பேசிய அவர், “விஜய் சேதுபதி வெறும் தமிழ் நடிகர் மட்டும் கிடையாது, அதே போல் இந்தியன் நடிகர் மட்டும் கிடையாது, உலகத்தரம் வாய்ந்த நடிகர். சிறப்பான நடிப்பை என் படத்தில் அவர் வெளிப்படுத்திருக்கிறார்” என்றார்.

X