சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விஜய் அமைச்சரவை - இயக்குநர் மாரி செல்வராஜ்

த.வெ.க சார்பில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கூட்டணி அமைச்சரவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விஜய் அமைச்சரவை  - இயக்குநர் மாரி செல்வராஜ்
Published on

சென்னை,

முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்.எல்.) கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்து அரசு அமைக்க உதவிய கட்சியினருக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவையில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com