விஜய் ரசிகர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள்: 'பராசக்தி' இயக்குநர் கோபம்

சுதா கொங்கரா அளித்த பேட்டியில், விஜய் ரசிகர்களை மறைமுகமாக சாடியுள்ளார்.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படம் களமிறக்கப்படுவதாக விஜய் ரசிகர்களால், படம் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்யப்பட்டது. எனினும், சென்சார் பிரச்சினையில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது வரை திரையரங்குகளுக்கு வரவில்லை. அதே நேரத்தில் பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும், பராசக்தி எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு சுதா கொங்கரா அளித்த பேட்டியில், விஜய் ரசிகர்களை மறைமுகமாக சாடியுள்ளார். சுதா கொங்கரா கூறியிருப்பதாவது:
“ஒரு படத்தை அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்ல, முன்பே ஒரு குழுவாக பெரிய வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த மார்க்கெட்டிங் யுகத்தில் படக்குழுவாக அதைச் செய்ய வேண்டும். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது. பொங்கல் வார இறுதியில் படம் பெரும்பான்மையான ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்றார். மேலும், சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தை சுதா கொங்கரா வாசித்தார். அந்த பதிவில், “சிபிஎஃப்சி-கிட்ட வாங்குறது பெருசு இல்லை. அண்ணா ஃபேன்ஸ்-கிட்ட சாரி கேட்டு, மன்னிப்பு சர்டிபிகேட் வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு. அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி படம் ஓடும்” என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதனை மேற்கோள் காட்டி பேசிய சுதா கொங்கரா, “படம் வெளியாகாத நடிகரின் ரசிகர்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் வருகின்றன. அவரின் ரசிகர்கள்தான் இதைச் செய்கிறார்கள். இதுதான் நாங்கள் எதிர்த்து போராடும் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம்” என்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களை ரவுடிகள் என மறைமுகமாக சுதா கொங்கரா விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






