வில்லன் கதாநாயகன் ஆனார் : போலீஸ் வேடத்தில், ஆர்.கே.சுரேஷ்

ஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வந்த ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை தயாரித்து இருக்கிறார்.
வில்லன் கதாநாயகன் ஆனார் : போலீஸ் வேடத்தில், ஆர்.கே.சுரேஷ்
Published on

டைரக்டர் பாலா, தாரை தப்பட்டை படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ், பின்னர் கதாநாயகன் ஆனார்.

அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படம், தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. படத்துக்கு, கொச்சின் ஷாதி அட் சென்னை-03 என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் நடித்து இருக்கிறார்.

இது, திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட மர்ம படம். கதை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னைக்கு பயணிக்கிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் 70 சதவீதம் தமிழும், 30 சதவீதம் மலையாளமும் பேசுகின்றன. மலையாள டைரக்டர் மஞ்சித் திவாகர் டைரக்டு செய்திருக்கிறார். அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ளார்.

படத்தை பற்றி டைரக்டர் மஞ்சித் திவாகர் கூறுகிறார்:-

ஒரு பெரிய இடத்து பையன் பல பெண்களை காதலித்து ஏமாற்றுகிறான். அவனிடம் ஏழைப்பெண் ஷாதிகா ஏமாந்து கர்ப்பம் ஆகிறாள். கருவை கலைக்க சென்னைக்கு வருகிறாள். அவளுக்கு என்ன நேர்கிறது? என்பதே கதை. பாலக்காடு, கொச்சி, குருவாயூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

பொள்ளாச்சி சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில், பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி இந்த படம் எச்சரிக்கிறது. பெண்களை பெற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com