

‘ஜோக்கர், குக்கூ, ஜப்பான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி, உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய ராஜு முருகன், “நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் வெளியானப்போது நானும் எச்.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு.எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு. இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டிதான்.எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது. மாரி மேடையில் ‘மை லார்ட்’ பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது" என பேசியிருக்கிறார்.