“விண்டேஜ் ரஜினி மீண்டும் திரையில்”... ‘மூன்று முகம்’ ரீ-ரிலீஸ்

சத்யா மூவீஸ் தயாரிப்பில் உருவான ‘மூன்று முகம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்னை,
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 12 ந் தேதி படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரீ ரிலீஸில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து ரஜினியின் மற்றோரு படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, சத்யா மூவீஸ் தயாரிப்பில் ஜெகநாதன் இயக்கத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான மூன்று முகம் திரைப்படத்தை அடுத்தாண்டு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விண்டேஜ் ரஜினி மீண்டும் திரையில் வருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்திருந்தார். இது 250 நாள்கள் திரையிடப்பட்டுச் சாதனை புரிந்த வெற்றித் திரைப்படமாகும். இந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதினை ரஜினிகாந்த் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






