48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்

அயோக்யா படத்துக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து கொடுத்தார்.
48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்
Published on

பி.மது தயாரிப்பில், விஷால் நடித்து வரும் புதிய படம், அயோக்யா. ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்டமான கோர்ட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான காட்சியை கடந்த மூன்று நாட்களாக அங்கு படமாக்கினார்கள். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

விஷாலுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் என்று பேசப்பட்ட நிலையில், இந்த படத்தில் வில்லனாக பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல் விஷாலுக்கு எதிரணி தலைவர் என்று சொல்லப்பட்ட ராதாரவியும் அயோக்யா படத்தில் இருக்கிறார். இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ஆடுகளம் நரேன், வம்சி, ராஷிகன்னா, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சுமார் 200-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் அந்த காட்சியில் பங்கேற்றனர்.

படத்தின் முக்கிய காட்சி என்பதால் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு-பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து, கோர்ட்டு காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார்.

ஏற்கனவே இந்த படத்துக்காக விஷால் தனது கடும் முயற்சியினால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில், தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்று படக்குழுவினர் மத்தியில் பேசப்பட்டது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com