‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் சந்திக்க தயார் நடிகர் கமல்ஹாசன் பேட்டி

‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் சந்திக்க தயார் என்று கமல்ஹாசன் கூறினார்.
‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் சந்திக்க தயார் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
Published on

சென்னை,

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 பட டிரெய்லர் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது பாவமல்ல பிரதர். ஆனால் தேசதுரோகியாக இருக்கிறது தப்பு என்ற கமல் பஞ்ச் வசனத்துடன் இந்த டிரெய்லர் வந்தது. தமிழ் டிரெய்லரை சுருதிஹாசனும், இந்தி டிரெய்லரை அமீர்கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். இந்த படம் குறித்து கமல்ஹாசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் தாமதம் ஆனதற்கு எங்கள் ராஜ்கமல் பட நிறுவனம் காரணம் இல்லை. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.

விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற வைரமுத்துவின் பாடல்கள் ரசிகர்களை அடிக்கடி கேட்கவைத்து உத்வேகத்தை ஏற்படுத்தியது. அந்த பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். விஸ்வரூபம்-2 படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருகிறது. ஹாலிவுட் படம் எத்தனை பிரிண்ட்களுடன் வருமோ அந்த அளவுக்கு இந்த படமும் வெளியாகும். விரைவில் தமிழ் படங்கள் உலகெங்கிலும் பார்க்கக்கூடிய படங்களாக மாறவேண்டும். இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும். இதில் நானும் பாடல் எழுதி இருக்கிறேன்.

விஸ்வரூபம் படத்துக்கு வந்ததுபோல் இந்த படத்துக்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். முதல் பாகத்துக்கு வந்த எதிர்ப்பு கூட மாறுவேடத்தில் வந்ததுதான். அந்த எதிர்ப்பு அவர்கள்பால் இருந்து வரவில்லை என்று பிற்பாடு நிருபணம் ஆனது. அது அரசியல். இந்த படத்துக்கும் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தால் நான் அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை முன்வைத்து இந்த படம் வரவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது.

சாபாஷ் நாயுடு, இந்தியன்-2 படங்களும் அடுத்தடுத்து தயாராகி வெளிவரும். நான் அரசியலுக்கு வந்து விட்டதால் இனி படங்களில் நடிப்பது குறையும். விஸ்வரூபம் முதல் பாகத்தை முன்கூட்டி திரையிட்டு காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன். இந்த படத்துக்கு அந்த வற்புறுத்தல் இருக்காது. இரண்டாம் பாகம் படத்தில் அதிகம் பேச்சுகள் இடம்பெறவில்லை. அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும் இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com