வாந்தி, சோர்வு... பாலியல் வன்கொடுமை காட்சியில் கசப்பான அனுபவங்கள் - பிரபல நடிகை பேட்டி

கைநாஜ் அக்தர் என்ற வேடத்தில் நடித்திருந்த தியா, உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது என கூறுகிறார்.
புதுடெல்லி,
தமிழில் நடிகர் மாதவன், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே. ரீமா மீது காதல் வசப்படும் மாதவன், ரீமாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அறிந்ததும் அதிர்ச்சி அடைகிறார். எனினும், உடனடியாக உஷாராகி ரீமாவையே கரம் பிடிக்கும் நோக்கத்துடன் அதற்கான செயல்களில் இறங்குகிறார். ரீமா திருமணம் செய்ய போகும் அப்பாஸ் வருவதற்கு முன்பு, தன்னை ரீமாவின் வருங்கால கணவர் (அப்பாஸ்) என அறிமுகப்படுத்தி கொண்டு காதலை தொடர்கிறார்.
இப்படி, வித்தியாச கதைக்களத்துடன் உருவாகியிருந்த இந்த படத்தின் இந்தி பதிப்பில் நடித்தவர் நடிகை தியா மிர்சா. அவருக்கு இது அறிமுக படம். ரெஹ்னா ஹை தேரே தில் மெயின் என்ற பெயரில் வெளிவந்த படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இதன்பின்னர், 2019-ம் ஆண்டு காபிர் என்ற தொடரில் மிர்சா நடித்திருக்கிறார். அது தற்போது படம் ஆகவும் வெளிவந்துள்ளது.
இதில், தவறுதலாக எல்லையை கடந்து இந்தியாவுக்குள் நுழையும் அப்பாவி பாகிஸ்தானிய பெண்ணாக தியா நடித்துள்ளார். அந்த தொடரில் பாலியல் வன்கொடுமை காட்சி படம் பிடிக்கப்பட்டபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். அது அவரை உலுக்கியது என கூறுகிறார்.
கைநாஜ் அக்தர் என்ற வேடத்தில் நடித்திருந்த தியா, அந்த காட்சியில் உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் நடிக்க வேண்டியிருந்தது என கூறுகிறார். அதனை நான் நினைவுகூர்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்ததும், உடல்ரீதியாக குலுங்கினேன்.
அந்த காட்சி முழுவதும் எடுத்த பின்பு நான் வாந்தி எடுத்தேன். அந்தளவுக்கு, காட்சிகளின் சூழ்நிலைக்காக உடல் மற்றும் உணர்ச்சிரீதியாக நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. சோர்வாகவும் உணர்ந்தேன். அந்த தருணத்தில், உண்மையாக நடிப்பதற்கு உங்களுடைய முழு உடலையும் முன்னெடுத்து செல்லும்போது, அதனை உணர்வீர்கள். அதன் முழு அளவையும் நீங்கள் உணர்வீர்கள் என்றார்.
ஏற்ற வேடத்திற்கு ஏற்ப, நீங்கள் காட்சியில் நடிக்க வேண்டும். ஒரு கலைஞராக உணர வேண்டும் என்பதே முதல் மற்றும் முக்கிய விசயம் என நான் நினைக்கிறேன். அப்போதுதான், நீங்கள் நடிக்கும்போது, முழு கதையுடனும், எல்லாவற்றுடனும் ஒன்றி இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.






