

நடிகை வாமிகா கபி ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அறிவித்திருந்தது.
‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இளையராஜா படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது.
‘பாக்கெட் நாவல்’ படம் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 14ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் முதல் பாடலான ‘ஆச அத்தான்’ டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாடலில் இடம்பெறும் நட்சத்திரம் யார் என்பதை ரசிகர்கள் யூகிக்கும்படியான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதனால், பாடலில் இடம்பெறப்போகும் அந்த நட்சத்திரம் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது.
இந்நிலையில், இப்பாடலில் நடிகை வாமிகா கபி சிறப்பு நடனமாடியுள்ளதை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். ‘டிசி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற வாமிகா இதில் நடனமாடியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.