போர் அடிப்படை மனிதத்தன்மையற்றது - இயக்குநர் ஞானவேல்


போர் அடிப்படை மனிதத்தன்மையற்றது - இயக்குநர் ஞானவேல்
x
தினத்தந்தி 28 April 2025 9:48 PM IST (Updated: 29 April 2025 12:26 PM IST)
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதல் குறித்து இயக்குநர் டி.ஜே. ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது. அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு' தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி. ஜே. ஞானவேல், "போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது. அது என்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. போருக்கான அடிப்படை அறத்தை மீறக்கூடாது. பெண்கள், நோயாளிகள், கால்நடைகள் அப்புறப்படுத்திவிட்டுதான் போரை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சுற்றுலா தளத்தில் பாதுகாப்பில்லை, மருத்துவத்துக்காக வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற துரதிஷ்டமும் அதில் வருகிறது. ஒரு விளைவு மற்றொரு விளைவை ஏற்படுத்துகிறது.போரால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிர்வுகளின் பாதிப்புகள் அதிகம். போர் பற்றிய வலிகளை இப்படம் சொன்னாலும் நகைச்சுவையாக கதை எடுக்கப்பட்டுள்ளது" என்று பேசினார். தான் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் இலங்கை போர் பற்றிய செய்திகளை கொடுத்த நினைவுகளை ஞானவேல் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஞானவேல் பேசிய வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது திரை பிரபலங்கள் போர் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். முன்னதாக ஐதராபாத்தில் நடந்த 'ரெட்ரோ' திரைப்பட விழாவில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.

1 More update

Next Story