'பிகில்' நஷ்டமா? லாபமா?... உண்மையை வெளிப்படுத்திய ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி

அர்ச்சனா கல்பாத்தி, சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பிகில்' திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

'பிகில்' நஷ்டமா? லாபமா?... உண்மையை வெளிப்படுத்திய ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமை செயல் அதிகாரி (CEO) அர்ச்சனா கல்பாத்தி, சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பிகில்' திரைப்படம், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

'பிகில்' படத்தில் பணியாற்ற வாய்ப்பு

இதுகுறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி, "அட்லீ இயக்கத்தில் உருவான 'பிகில்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. அந்தப் படத்தில் நானும் பணியாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் என் அப்பாவிடம் கூறினார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அந்தப் படத்தை பொறுப்புடன் கவனிக்க ஆட்கள் தேவை என்பதால், என்னை அட்லீயிடம் அறிமுகப்படுத்தி படத்தின் பணிகளில் ஈடுபடுமாறு விஜய் சார் கூறினார்" என்றார்.

முதல் முறையாக டைட்டிலில் இடம்பெற்ற பெயர்

மேலும் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், "'பிகில்' படத்திற்கு முன்பு எந்த திரைப்படத்திலும் எனது பெயர் இடம்பெற்றதில்லை. ஆனால், இந்தப் படத்தில் நான் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் என் பெயரை சேர்க்க வேண்டும் என்று விஜய் சார் என் அப்பாவிடம் கூறினார். அதன்பிறகே என் பெயர் படத்தில் இடம்பெற்றது" என்று தெரிவித்தார்.

'பிகில்' தான் அதிக லாபம் ஈட்டிய படம்

'பிகில்' திரைப்படத்தின் வசூல் குறித்து பரவி வரும் கருத்துகளுக்கும் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்தார். "எங்கள் நிறுவனம் இதுவரை அதிக செலவில் தயாரித்த திரைப்படம் 'பிகில்'. அதே நேரத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த படமும் அதுதான். ஆனால், அந்தப் படம் நஷ்டத்தை சந்தித்ததாக ஒரு தவறான தகவல் பலரிடமும் பரவி வருகிறது. உண்மையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பயணத்தில் மிகப்பெரிய லாபகரமான படம் 'பிகில்' தான். ஆனால், அது சரியான முறையில் எங்கும் பதிவாகவில்லை" என்று கூறினார்.

மேலும், "அட்லீயின் மிகப்பெரிய விஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அதிக பட்ஜெட்டில் அந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்" என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், 'பிகில்' திரைப்படம் குறித்த அவரது கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com