நடிகர் ஸ்ரீ நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது - "இறுகப்பற்று" தயாரிப்பாளர்

பிரபல நடிகர் ஸ்ரீயை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக பிரபல தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறியுள்ளார்.
சென்னை,
2012-ம் ஆண்டு வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கேரக்டரில் அப்படியே பொருந்தி இருந்தார். படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்','வில் அம்பு', 'மாநகரம்' படங்கள் அவருக்கு கைகொடுத்தன. கடந்த 2023-ம் ஆண்டு 'இறுகப் பற்று' படம் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. ஆனால் அதன்பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், நல்ல படங்களை கொடுத்தும் முன்னணி இடத்திற்கு இவரால் செல்ல முடியவில்லை.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சில வருடங்களாக இவரை காணாமல் ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு எதனால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர்.சமீபத்தில் இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் ஸ்ரீக்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இறுகப்பற்று படத்தில் நடித்தற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஸ்ரீக்கு சம்பள பாக்கி வைத்ததால்தான் இந்த நிலைமைக்கு அவர் ஆளானதாக தகவல் வெளியானது. இதனால், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனர் எஸ். ஆர். பிரபுவை ரசிகர்கள் கடுமையாகத் தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்ட எஸ். ஆர். பிரபு, "ஸ்ரீயின் நலன் குறித்து எங்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. நீண்ட நாள்களாக அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாங்கள் உள்பட அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறோம். இது குறித்து ஏராளமான ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், ஸ்ரீயை மீட்டெடுத்து அவரை மீண்டும் பழைய உடல்நலத்துக்குக் கொண்டு வருவதே முதல் நோக்கமாக இருக்கும். அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் நன்றி கூறுவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.






