நாம் எதிரிகள் இல்லை.. நண்பர்கள்.. கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்-மந்திரி

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாம் எதிரிகள் இல்லை.. நண்பர்கள்.. கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்-மந்திரி
Published on

பெங்களூரு,

நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'தக் லைப்'என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், கன்னட மொழி பற்றி பேசிய கமல்ஹாசனின் 'தக் லைப்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தல்கள் வலுக்க, அதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்திய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசன் மே 30-ம் தேதிக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது. ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியுள்ளார். தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதி கோவிந்து, கன்னட மக்களின் மனதை காயப்படுத்தியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுத்தான் நாங்கள் செயல்பட வேண்டும். எனவே கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்படுகிறது என்றார்.

திரையிடக் கூடாது மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். டிகே சிவக்குமார் பேசுகையில், "நாம் அண்டை மாநிலத்தவர்கள். நாம் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். நாம் எதிரிகள் கிடையாது. அனைவரும் நண்பர்கள். இந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்கு தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல்ஹாசனை விமர்சித்திருந்த நிலையில், துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமார், கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து சொல்லாதது கவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com