

சென்னை,
தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.
கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் நிதியுதவியும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். நாங்கள் உடனே அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என கோரவில்லை. மக்களின் பிரச்னைகளை கேட்டு அவற்றை தீர்க்க வேண்டும். கஜா புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஓர் இரங்கல்கூட தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோன்று அவர், கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.