சிவாஜி விட்டுச்சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசிக்கிறோம் - நடிகர் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மகன் பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மரியாதை செலுத்தினர்
சென்னை,
1952-ஆம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான 'பராசக்தி' திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவாஜி கணேசன், தனது அசாத்திய நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு உடல்மொழி, முக பாவனை என தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன்.
நவராத்திரி, கலாட்டா கல்யாணம், வசந்த மாளிகை, தங்கப் பதக்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உலக அளவில் நடிப்பிற்கு இலக்கணமாக கருதப்படும் சிவாஜி கணேசன், நடிகர் திலகம் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் முழுஉருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், அவரது உருவப்படம் ஒன்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் சிலைக்கு அவரது மகனும் நடிகருமான பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, "சிவாஜி கணேசன் நம்மை விட்டுச் சென்று 24 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது ரசிகர்களை பார்க்கும் போது அவர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் திலகத்தை குடும்ப நண்பர், சகோதரனாக இன்றும் பார்த்து வருகின்றனர். சிவாஜி உங்களது அனைவருடைய எண்ணங்களிலும் வாழ்ந்து வருகிறார். எனது தந்தை அனைவரையும் இதயங்கள் என்று தான் கூறுவார், அவர் இதயங்கள் அனைவருக்கும் நன்றி. அப்பா விட்டுச் சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசித்து வருகிறோம், அதுதான் இந்த ரசிகர்கள்" என தெரிவித்தார்.






