மக்களை நம்பிதான் படம் எடுக்கிறோம் - இயக்குநர் பா ரஞ்சித்

மக்களை நம்பிதான் படம் எடுக்கிறோம் - இயக்குநர் பா ரஞ்சித்

சிறிய படங்களை மக்கள் விரும்பி பார்க்கும் இடத்திற்கு தமிழ் சினிமா வந்திருக்கிறது என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.
Published on

கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தற்போது, ‘காளிதாஸ்’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

‘காளிதாஸ் 2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா ரஞ்சித், “தமிழ் ரசிகர்கள் சிறிய படங்களுக்கு வரவேற்பு அளிப்பதும், சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்களும் கிடைக்கின்றன. இங்கு சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கத்தான் செய்கிறது. சிறிய திரைப்படம் ‘யூத்’ நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நானும் தொடர்ந்து சிறிய படங்களை தயாரித்து வருகிறேன். மேலும் இந்த ஆண்டு என் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இரு திரைப்படங்களை திரைக்கு கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது. மக்களை நம்பி தான் படம் எடுக்கிறோம். ஓ.டி.டி. நிறுவனங்களை கடந்து தியேட்டர்கள் தான் எங்களது நம்பிக்கை.

‘காளிதாஸ் 2’ படத்தை நான் பார்த்து விட்டேன். மூன்று பெண் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பரத் நன்றாக செய்திருந்தார். அஜய் கார்த்திக் உங்கள் நடிப்பு மிக அழுத்தமாக இருந்தது. சாம் சி எஸ் உங்களுடைய பின்னணி இசை இந்தப் படத்துக்கு தூணாக இருந்தது. கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். இன்று தமிழ்சினிமா சின்ன படங்களை மக்கள் விரும்பி பார்க்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு நிறைய திரையரங்குகள் ஆதரவும் தருகிறார்கள். சிறிய, சாதாரண கதையை வைத்து கொண்டு அர்ப்பணிப்புடன் உழைத்தால் மாபெரும் வெற்றி பெறலாம் என்பதற்கு ‘சிறை’ திரைப்படம் உதாரணம் ” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com