‘சண்டியர்’ என்ற பெயரில் கமல்ஹாசனை படம் எடுக்க விடமாட்டோம் - டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், புதிதாக எடுக்கப்படும் படத்திற்கு சண்டியர் எனப் பெயர் சூட்டி இருக்கின்றார்.
‘சண்டியர்’ என்ற பெயரில் கமல்ஹாசனை படம் எடுக்க விடமாட்டோம் - டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
Published on: 

கோவை,

கமல்ஹாசன் இந்த படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ண சாமியின் பேட்டி

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மூத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், புதிதாக எடுக்கப்படும் படத்திற்கு சண்டியர் எனப் பெயர் சூட்டி இருக்கின்றார். 2003-ம் ஆண்டு இதே பெயரை வைத்தபோது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று சண்டியர் படப்பெயரை கமல்ஹாசன் கைவிட்டார்.

படத்தை எடுக்கவும் முடியாது, படத்தை ஓட்டவும் முடியாது

இப்போது 23 வருடங்கள் கழித்து சண்டியர் என அதே பெயரில் படம் எடுப்பதாக கமல்ஹாசன் சொல்லி இருக்கின்றார். சாதிய மோதலை தூண்டும் வகையில் சண்டியர் என்ற பெயரில் படம் தொடங்க கூடாது. கமல்ஹாசனிடம் நீங்கள் எடுங்கள், நாங்கள் பின்புலமாக இருக்கின்றோம் என யாரோ அவருக்குச் சொல்லி இருக்கின்றனர். தமிழகத்தில் அவர் படத்தை எடுக்கவும் முடியாது, படத்தை ஓட்டவும் முடியாது. சண்டியர் பெயரை திரும்பப் பெற தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சென்று வலியுறுத்துவேன்.

மீண்டும் கலவரம் ஏற்படும்

முதல்-அமைச்சர் விஜய், கமல்ஹாசனை அழைத்து ஜெயலலிதாவை போன்று உரிய அறிவுரை சொல்ல வேண்டும். தென்மாவட்டங்களில், 1995-ம் ஆண்டு போன்ற கலவரங்கள் மீண்டும் ஏற்பட்டால் பிரச்சினையாகும். கமல்ஹாசன் இந்த படத்தை எடுத்தால் அவர் தமிழகத்தை விட்டே ஓட வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X