'வெனஸ்டே சீசன் 2'- வைரலாகும் புதிய போஸ்டர்

இதில் சில புதிய முகங்களும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை,
அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது. தற்போது இதன் 2-வது சீசன் உருவாகி வருகிறது. இதில், வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா, எனிடாக எம்மா மியர்ஸ், பியான்காவாக ஜாய் சண்டே, யூஜினாக மூசா மொஸ்டாபா, அஜாக்ஸாக ஜார்ஜி ஃபார்மர், டைலராக ஹண்டர் டூஹான் , மோர்டிசியா ஆடம்ஸாக கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், கோமஸ் ஆடம்ஸாக லூயிஸ் குஸ்மான், பக்ஸ்லி ஆடம்ஸாக ஐசக் ஒர்டோனெஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமில்லாமல், சில புதிய முகங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, பாரி டார்ட்டாக ஸ்டீவ் புஸ்ஸெமி, கிராண்ட்மாமாவாக ஜோனா லம்லி நடிக்கிறார்கள். இந்த சீசன் 2- பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதியும், 2-ம் பாகம் செப்டம்பர் 3-ம் தேதியும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






