உழைப்பாளி இல்லையென்றால் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்- வைரமுத்து

உலகத்தை எந்த மதத்தாலும் ஒன்றுபடுத்த முடியவில்லை, உழைப்பு என்ற மதமே ஒன்றுபடுத்தும் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
உழைப்பாளி இல்லையென்றால் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்- வைரமுத்து
Published on

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கவிஞர் வைரமுத்து தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"உழைப்பாளி இல்லையென்றால்

இந்த பூமி

பிறந்த மேனியாகவே

இருந்திருக்கும்;

நாகரிகத்துக்கு

உருவம் கிடைத்திருக்காது

மனிதன்

இரண்டு கால் மிருகமாய்

இருந்திருப்பான்

உலகம் காணுகிற

ஒவ்வொரு சுகமும்

தொழிலாளியின்

பத்துவிரல்களால்

படைக்கப்பட்டவை

உலகத்தின்

வற்றாத ஜீவ நதி

வேர்வை மட்டும்தான்

அவன் முதுகு வளைய வளைய

உலகு நிமிர்ந்தது

சம்பள மிருகமாய் இருந்தவனை

மனிதன் என்று

மதிப்புக்கூட்டிய தினம்

மே தினம்

சோறு போட்டவனுக்குச் சோறு

ஆடை நெய்தவனுக்கு ஆடை

வீடு கட்டியவனுக்கு வீடு

என்று

சிந்தித்துப் பார்த்த

சிறந்த தினம் மே தினம்

உலகத்தை

எந்த மதத்தாலும்

ஒன்றுபடுத்த முடியவில்லை;

உழைப்பு என்ற மதமே

ஒன்றுபடுத்தும்

வாழ்க மே தினம்

வெல்க தொழிலாளர்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com