

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. தி.மு.க கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. இதில் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
இதனிடையே தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நடிகர் விஷால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “தளபதி விஜய் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க தமிழக ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார்? மக்கள் தீர்ப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? 233 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டிய நிலையில், தவெகவுக்கு பெரும்பான்மை ஆதரவளித்து மக்கள் தீர்ப்பளித்த நிலையில், நமக்கு தேவை ஒரு அரசாங்கம்தான். ஆளுநர் ஆட்சியல்ல. அன்பிற்குரிய விஜய் நீங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நிச்சயம் அமைப்பீர்கள். ஒரு வாக்காளனாக அதை உறுதிப்படுத்த நான் முன்நிற்பேன்” என்று கூறியுள்ளார்.