

இந்த வருடம் இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாரான சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உள்ளிட்ட பல படங்கள் தோல்வி அடைந்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. அமீர்கான் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் தயாரான 'லால்சிங் சத்தா' படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணங்கள் குறித்து நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்து பிரபலமான தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி கருத்து தெரிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''இந்தி படங்கள் தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடி எடுத்து வைத்துள்ளன. இதன் மூலம் நடிகர், நடிகைகளுக்கும், இயக்குனர்களுக்கும் பெரிய அளவில் சம்பளம் கிடைக்க தொடங்கி உள்ளது. படத்தை எப்படி இயக்கினாலும் கைக்கு பணம் வந்து விடுவதால் தாங்கள் நடிக்கும் அல்லது இயக்கும் படங்கள் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்னும் வெறி அவர்களிடம் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்தி படங்கள் வெற்றியை அடைய முடியவில்லை" என்றார். அவரது பேட்டி வைரலாகி வருகிறது.