

சென்னை,
மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இளம் நடிகர்களில் ஒருவர். 'பாணா காத்தாடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், 'பரதேசி', 'சண்டிவீரன்', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது, அதர்வா நடிப்பில் 'இதயம் முரளி' திரைப்படம் வருகிற 10ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பான உடற்கட்டைக் கொண்ட நடிகர்களில் ஒருவராக விளங்கும் அதர்வா, தனது உடற்தகுதியை பராமரிக்கும் உணவுப் பழக்கம் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் என்னுடைய சாப்பாட்டை அடிக்கடி மாற்ற மாட்டேன். பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிடுவேன். முன்பு காலை உணவாக முட்டை சாப்பிட்டு வந்தேன். ஆனால் இப்போது பழைய சாதம் சாப்பிடுகிறேன். மதிய உணவில் சிக்கன் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வேன். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடுவேன். காலை, மதியம் டயட் உணவு என்றாலும், இரவு மட்டும் தோசை சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
அதர்வாவின் இந்த எளிமையான உணவுப் பழக்கம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.