

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் பகிர்ந்த மாலத்தீவு புகைப்படங்கள் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்களை விமர்சித்தவர்களுக்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'தி பாக்கெட் நாவல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு இடையே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு எடுத்த பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலான நிலையில், பலர் அவரது தோற்றத்தை பாராட்டியதோடு, சிலர் உடைத் தேர்வு குறித்து விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், "பிகினி அணிவதில் என்ன தவறு? வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில், நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்குத் தெரியும். எனவே எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மாளவிகா மோகனனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.