தேன் நிலவு எப்படியிருக்க வேண்டும்... திருமண கனவு பற்றி நடிகை ஜான்வி கபூர் பேட்டி

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலேயே திருமணம் நடக்க வேண்டும். அது விரைவாக நடைபெற வேண்டும் என்றார்.
புனே,
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர். பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும், தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட பரம் சுந்தரி என்ற படத்தில் தென்னிந்திய பெண்ணாக நடித்து இருக்கிறார். இந்த படம் நேற்று வெளியானது.
இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 7.37 கோடியும், உலகளவில் ரூ.10 கோடியும் வசூலித்து உள்ளது. அவர் காதல், திருமணம் மற்றும் குடும்பம் பற்றி பேசும் வழக்கம் கொண்டவர். இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர், தன்னுடைய திருமணம் பற்றிய தனிப்பட்ட கனவை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார்.
வோக் என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், என்னுடைய திருமணம் மிக எளிமையாக இருக்க வேண்டும். திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், அதிக மக்கள் கூடுவதில் நிச்சயம் விருப்பம் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும். அது விரைவாக நடைபெற வேண்டும் என்றார்.
அவர் தேனிலவு பற்றி கூறும்போது, அது மிக நீண்டதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அணியும் ஆடை மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைப்பில் தான் இருக்கும் என எனக்கு தெரியும். ஏனென்றால் அவர் எனக்கு மிகவும் பிடித்த நபர் என கூறினார்.
தொடர்ந்து அவர், நவீன கால உறவுகளை பற்றி மனம் திறந்து பேசினார். இன்றைய உலகில் காதலை கண்டறிவதே கடினம் என்ற நிலை காணப்படுகிறது. உடனடியாக கிடைக்க கூடிய இன்பம், காதலுக்கான ஒட்டுமொத்த சிந்தனையையும் மாற்றியமைத்து உள்ளது. பலருக்கும் இன்று பொறுமையோ, ஆர்வமோ அல்லது உண்மையான உறவு ஏற்படுவதற்கான வெளிப்படை தன்மையோ காணப்படவில்லை என்று கூறினார்.
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் மற்றும் நடிகரான ஷிகர் பஹாரியாவும், நடிகை ஜான்வி கபூரும் காதலித்து வருகின்றனர். காதலரின் பெயர் பொறித்த நெக்லசை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டு போனிகபூர் அதனை அங்கீகரித்து உள்ளார்.






