புகழின் உச்சத்தை உணர்ந்த அந்த தருணம் - பகிர்ந்த மாதுரி தீட்சித்

முதன்முறையாக புகழின் உச்சியை உணர்ந்த மறக்க முடியாத தருணத்தை மாதுரி தீட்சித் நினைவுகூர்ந்துள்ளார்.
மாதுரி தீட்சித்/Madhuri Dixit
Published on

மும்பை,

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மாதுரி தீட்சித், தனது வாழ்க்கையில் முதன்முறையாக புகழின் உச்சியை உணர்ந்த மறக்க முடியாத தருணத்தை நினைவுகூர்ந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தனது சினிமா பயணத்தின் முக்கியமான அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

‘தேசாப்’ படத்துக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்

தனது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘தேசாப்’ திரைப்படம் வெளியான பிறகு நடந்த சம்பவம்தான் தன்னை உண்மையான நட்சத்திரமாக உணர வைத்ததாக மாதுரி கூறினார்.

ஒரு முறை விமான நிலையத்திற்கு நான் சென்றிருந்தபோது, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தன்னை பார்த்ததும், “ஏய்... இவங்கதான்... 1, 2, 3 மோகினி!” என்று உற்சாகமாக கத்திக்கொண்டு ஓடி வந்ததாக அவர் தெரிவித்தார்.

முதல் ஆட்டோகிராப்

மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொண்டதை பார்த்து ஆச்சரியமடைந்த மாதுரி, தனது வாழ்க்கையின் முதல் ஆட்டோகிராப்பை அந்த சிறுவர்களுக்கே வழங்கியதாக கூறினார். அப்போது ஒரு சிறுவன் மற்றொருவரிடம், “பார்த்தியா... நான் சொன்னேன்ல, இவங்கதான் மோகினி” என்று மகிழ்ச்சியுடன் கூறியதாகவும், அந்த தருணமே தான் பிரபலமாகிவிட்டதை உணர வைத்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

வெற்றிப் படங்களால் உருவான நட்சத்திரம்

1984-ம் ஆண்டு ’அபோத்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மாதுரி தீட்சித், பின்னர் தில், பீட்டா, ஹம் ஆப்கே ஹைன் கோன் மற்றும் ’தில் டு பாகல் ஹை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அடுத்ததாக ‘மா பெஹன்’

மாதுரி தீட்சித் தற்போது இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியுள்ள ’மா பெஹென்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் டிரிப்தி டிம்ரி, தர்னா துர்கா மற்றும் ரவி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் 4-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

1988 -ம் ஆண்டு வெளியான 'தேசாப்' (Tezaab) திரைப்படத்தில் மாதுரி தீட்சித் 'மோகினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் ஆடிய "ஏக் தோ தீன்" (Ek Do Teen) பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com