பிலிம்பேர் விருதுகளை வீட்டின் கழிவறை கைப்பிடிகளாக பயன்படுத்துகிறேன் - நசீருதீன் ஷா

பிரபல இந்தி நடிகரான நஸ்ருதீன் ஷா தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை கழிவறை கைப்பிடியாக பயன்படுத்துவதாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி சினிமாவில் பழம்பெரும் நடிகராக விளங்குபவர் நசீருதீன் ஷா தனது தத்ரூபமான நடிப்பால் உலக அளவில் அடையாளம் காணப்படும் இந்திய நடிகர்கள் முக்கியமானவராக உள்ள நசீருதீன் ஷா இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர். பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் விருதுகள் குறித்து பேசிய நசீருதீன் ஷா "எல்லா நடிகர்களுமே ஒரு குறிப்பிட்ட கதையின் கதாப்பாத்திரமாக மாறி அந்த கதையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நடிக்கிறார்கள். அவர்களை அழைத்து அவர்களில் ஒருவரை சிறந்தவர் என விருது கொடுப்பது எந்த அளவுக்கு நியாயம்? நான் சமீபமாக வழங்கப்பட்ட பிலிம்பேர் விருதுகளுக்கு செல்லவில்லை. ஏற்கனவே வாங்கிய விருதுகளை நான் கட்டிய பண்ணை வீட்டின் கழிவறைக்கு கைப்பிடியாக அமைத்திருக்கிறேன். கழிப்பறை செல்லும் நீங்கள் எவரும் இரண்டு முறை உங்கள் கையால் விருதை பெற முடியும்" என கிண்டலாக கூறியுள்ளார்.
பிலிம் பேர் உள்ளிட்ட திரைத்துறை விருதுகளை அவர் கிண்டல் செய்திருந்தாலும், இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம விருதுகளை பெற்றதே தனது வாழ்வின் மதிப்பு வாய்ந்த தருணம் என அவர் பேசியுள்ளார். "நான் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றபோது, என் தொழில் வாழ்க்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன். அந்த மரியாதைகளைப் பெற நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது, நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று நசீருதீன் ஷா கூறியுள்ளார். தற்போது புற்றீசல் போல கிளம்பியுள்ள திரை விருது விழாக்களை குப்பை என அவர் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






