'ஜனநாயகன்' தியேட்டர்களில் ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜனநாயகன்' தியேட்டர்களில் ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்
Published on

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக தயாரானார்கள். படத்தின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில், இந்த படம் சொன்ன தேதியில் ரிலீசாகவில்லை.

பல்வேறு சிக்கல்களை கடந்து மறு தணிக்கை குழுவினர் கடந்த மாதம், 'ஜனநாயகன்' படத்தை பார்த்துவிட்ட பிறகும் ரிலீஸ் தேதி பற்றி ஒரு முடிவு தெரியாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுபடமும் இணையதளத்தில் வெளியானது. இது படக்குழுவினர் தாண்டி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. படம் இணையதளத்தில் வெளியாவதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் களத்தில் இறங்கினார்கள். இதற்கிடையில், 'ஜனநாயகன்' படத்தை இணையதளம் வாயிலாக பரவவிட்டதாக 6 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படத்தை வரும் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாளை விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் தரப்பு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் ரிலீஸ் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில், அடுத்த கட்டமாக ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பிலும் ஒத்துழைப்பு கிடைத்தால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com