

ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படமான தேவரா – பாகம் 1 கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. கொரட்டலா சிவா இயக்கத்தில் தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றியை பதிவு செய்தது. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேவரா – பாகம் 2 வெளியாகும் என இயக்குநர் கொரட்டலா சிவா ஏற்கனவே அறிவித்திருந்தார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பாதி வரை நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், சமீபகாலமாக தேவரா 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் மிகிலினேனி, தேவரா 2 குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், “தேவரா 2 படம் நிறுத்தப்படவில்லை. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2027-ஆம் ஆண்டு படம் வெளியாகும். இது கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.