

சென்னை,
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' ஆவணப்படம் நவம்பரில் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், சினிமா தாண்டி கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். தொடர்ச்சியாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தும் வருகிறார்.
இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
இதுகுறித்து ஏ.எல்.விஜய் கூறும்போது, "இது அஜித்தின் நீண்டநாள் கனவு திட்டம். வழக்கமாக இணையதளங்களில் வெளியாகும் டிரெய்லர்களுக்கு மத்தியில், தியேட்டர்களில் வெளியான இந்த டிரெய்லர் புது அனுபவத்தை தந்தது. ரியல் ஹீரோவாக களத்தில் அஜித் சார் காட்டிய உழைப்பை நேரடியாகப் படமாக்கியது எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது" என்றார்.
இந்த நிலையில், 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' ஆவணப்படம் நவம்பரில் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
‘குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'டேர் டெவில்' என்ற படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தையும் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார்.