வாழ்க்கையில் யாருக்குதான் “துரோகம்” நடக்கவில்லை? - இசையமைப்பாளர் டி.இமான்

குறிப்பிட்ட திரைப்படம் தேசிய அளவில் நம் மாநிலத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால், அதை ஒட்டுமொத்த தமிழர்களின் வெற்றியாக பார்க்க வேண்டும் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.
வாழ்க்கையில் யாருக்குதான் “துரோகம்” நடக்கவில்லை? - இசையமைப்பாளர் டி.இமான்
Published on

துரோகம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடைபெறக்கூடிய விஷயம்தான் என்று இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.

பலராம்கிருஷ்ணா இயக்கத்தில் கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘நிறம்’ . படத்தில் கதாநாயகனாக முகேன் ராவ் நடித்துள்ளார். மேலும் பிரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் முகேன் ராவ், நடிகை தான்யா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இசையமைப்பாளர் டி. இமான், தனக்கு துரோகம் நிகழ்ந்ததாக கூறப்படுவது குறித்து பேசுகையில், “யாருக்குதான் துரோகம் நடக்காமல் இருக்கிறது? அது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடைபெறக்கூடிய விஷயம் தான். இந்தப் படத்தில் துரோகம் குறித்து பா.விஜய் எழுதியுள்ள பாடல் அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருப்பதாக எனக்கு தோன்றியது” என்றார்.

தேசிய விருது தொடர்பான சர்ச்சைகள் குறித்து பேசிய இசையமைப்பாளர் டி.இமான், “இந்தப் படம், இந்தப் பாடல் என்பதை தாண்டி, தேசிய அளவில் நம் மாநிலத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால், அதை ஒட்டுமொத்த தமிழர்களின் வெற்றியாகவே பார்க்க வேண்டும். ஒரு விருது என்பது அந்தப் படைப்பிற்கான அங்கீகாரமாக சில நேரங்களில் சரியாக இருக்கலாம் சில நேரங்களில் தவறுகளும் நடந்திருக்கலாம். ஆனால், ஒரு கலைஞர் எங்கிருந்து வந்தார்? திரைத்துறையில் தனது இடத்தை நிலைநிறுத்த கொடுத்த உழைப்பு என்ன? என்பதையும் கருத்தில் கொண்டு பல விஷயங்கள் நடைபெறுகின்றன. அதுவே முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

தேசிய விருது தகுதியானதா, தகுதியற்றதா என்ற விவாதத்திற்கு எப்போதும் மாற்றுக் கருத்துகள் இருந்து கொண்டே இருக்கும். அதையெல்லாம் தாண்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து விருது பெறும் போது, அதை நம் மாநிலத்தின் பெருமையாகவே கருத வேண்டும். இந்தப் படத்திற்கு விருது கிடைக்கவில்லை, அந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று மட்டும் பார்க்காமல், அந்தப் படங்கள் முறையாக தேர்வுக் குழுவிடம் அனுப்பப்பட்டதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதியான பல படங்கள் இருந்தாலும், அவை சரியான முறையில் தேர்வுக் குழுவைச் சென்றடையாமல் இருக்கலாம். தேசிய விருதுகள் பொறுத்தவரை பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, தேர்வுக் குழுவினரை மட்டும் குறை கூறுவது சரியான அணுகுமுறை அல்ல ” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சில வருஷத்துக்கு முன்பு அவர் கொடுத்த ஒரு பேட்டிதான். எனக்கு மிகப்பெரிய துரோகம் நடந்திருக்கிறது, அதை செய்தது சிவகார்த்திகேயன் என்று இமான் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் அவர் துரோகம் பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com