

சென்னை,
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நமீதா. திருமணத்திற்கு பிறகு பல ஆண்டு காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்த அவர், தற்போது மீண்டும் திரை உலகிற்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் திருமணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் மட்டும் ஏன் தாலி அணிய வேண்டும்? பெண்கள் மட்டுமே சில மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன? ஆண்களுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லையே?
ஒரு மனைவியாக நான் என் கணவருக்காக விரதம் இருந்து அவர் நீண்ட காலம் வாழ பிரார்த்திக்க முடியும். ஆனால் கணவர் வருடத்திற்கு ஒரு நாளாவது தன் மனைவியின் நலனுக்காக ஒதுக்கவேண்டும் என்று விதி இருக்கிறதா? அப்படி ஒரு விதியே இல்லை. சமூகம் ஏன் அப்படி ஒன்றை உருவாக்கவில்லை.
ஏன் எல்லா விதிகளும் பெண்களுக்கு மட்டுமே எழுதப்படுகின்றன? திருமணத்திற்கு பிறகு பெண்கள் தாலி அணிய வேண்டும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதா? வேதங்களிலோ, புராணங்களிலோ குறிப்பிடப்பட்டுள்ளனவா? நிச்சயமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.