அறிவியலுக்கே சவால் விடும் சண்டை காட்சிகள் எடுக்கப்படுவது ஏன்? - பாலையா விளக்கம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை என்று பாலையா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா ரசிகர்களால் 'பாலையா' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். தென்னிந்திய சினிமாவில் இவருக்கான ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அறிவியலுக்கே அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இவரது படங்களில் சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும். ரெயிலை ஒற்றை கையால் நிறுத்துவது, தரையை மிதித்து ஈட்டியை எடுப்பது, கண் பார்வைக்கே எதிரியை பல அடி தூரம் வீசி எறிவது போன்ற இவரது சண்டை காட்சிகள் சிலிர்ப்பை வரச்செய்யும்.
இதற்கிடையில் தனது படங்களில் சண்டை காட்சிகளில் பிரமிப்பாக எடுக்கப்படுவது குறித்து, பாலையா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ரசிகர்கள் அதிரடி படங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் திருப்திபடுத்தவே முடியாது.
எனது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் விரும்பும்படியான காட்சிகள் இருக்கும்வகையில் பார்த்துகொள்கிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்த 'ரிஸ்க்'கும் நான் எடுப்பேன்'', என்றார்.
65 வயதாகும் பாலையா தற்போது போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா 2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.