"சீதா ஏன் எதிர்த்துப் போராட முடியவில்லை?" - பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா விமர்சனம்

'ராமாயணம்' படத்தில் சீதா தேவியை சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் போராளியாகச் சித்தரித்திருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"சீதா ஏன் எதிர்த்துப் போராட முடியவில்லை?" - பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா விமர்சனம்
Published on: 

மும்பை,

மூத்த இந்தி நடிகரும், 'சக்திமான்' தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவருமான முகேஷ் கண்ணா, இப்படத்தில் சீதையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

'ராமாயணம்' படம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணம்'. ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் இப்படம் தொடர்பாக பல்வேறு விவாதங்களும் எழுந்து வருகின்றன.

சீதா ஏன் எதிர்த்துப் போராட முடியவில்லை?

இந்த நிலையில், மூத்த இந்தி நடிகரும், 'சக்திமான்' தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவருமான முகேஷ் கண்ணா, இப்படத்தில் சீதையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். படத்தில் சீதா தேவியை சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் போராளியாகச் சித்தரித்திருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "சீதா தேவியை ராணி லட்சுமிபாய் போல சண்டையிடும் வீராங்கனையாகக் காட்டுகிறீர்களா? இன்றைய கதாநாயகிகள் சிலர் ஆண்களைப் போல வலிமையானவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அதுபோன்று சீதையின் கதாபாத்திரத்தையும் மாற்ற வேண்டுமா? வால்மீகி எழுதிய ராமாயணத்தை நான் படித்திருக்கிறேன். அதில் சீதை எங்கும் சண்டையிட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. அவர் ஒரு போர்வீரர் கிடையாது. அப்படி இருந்திருந்தால் ராவணன் அவரைக் கடத்திச் சென்றபோதே எதிர்த்துப் போராடியிருக்க மாட்டாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

படக்குழுவுக்கு எதிராக விமர்சனம்

மேலும், சீதையின் சண்டைக் காட்சிகள் குறித்து படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, அந்தக் காட்சிகள் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்றும், 'அத்புத ராமாயணம்' நூலை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதனை ஏற்காத முகேஷ் கண்ணா, வால்மீகி ராமாயணத்தில் இல்லாத கற்பனைக் காட்சிகளைச் சேர்ப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வால்மீகியின் ராமாயணத்தில் சொந்தக் கதைகளைத் திணிக்கக் கூடாது என்றும் படக்குழுவினரை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, தான் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றும், வெளியான விளம்பரக் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

X