

சென்னை,
'தலைவர் 173' படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பான நடிகை குஷ்பூ நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'தலைவர் 173' என்று அழைக்கப்பட்ட இப்படத்தை, ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'தர்மன்' படத்தை ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. அதன்பிறகே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்க ஒப்பந்தமானார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஏதோ ஒரு காரணத்தால் சுந்தர்.சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகினார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய குஷ்பூ, "ஒரு இயக்குநருக்கு எந்தப் படத்தை இயக்க வேண்டும், எந்தப் படத்தை இயக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் முழு உரிமை இருக்கிறது. சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவலை கமல்ஹாசன் சாருக்கு தொலைபேசி மூலம் நான்தான் தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது திரையுலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.