25 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காதது ஏன்? நடிகை சங்கீதா பதில்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அஜய் கார்த்தி, சங்கீதா நடிக்கும் “காளிதாஸ் 2” படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
25 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காதது ஏன்? நடிகை சங்கீதா பதில்
Published on

விஜயகாந்துடன் 'அலெக்சாண்டர்', ராஜ்கிரணுடன் 'எல்லாமே என் ராசா தான்' விஜய்யுடன் 'பூவே உனக்காக' உட்பட பல தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் சங்கீதா. ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘காளிதாஸ்’. இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா, முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சங்கீதா பேசியதாவது, “இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.

‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழு குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது. அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி. இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com