“விஸ்வநாத் & சன்ஸ்” பட போஸ்டரில் நாயகி பெயர் ஏன் இடம்பெறவில்லை? - நடிகை சனம் ஷெட்டி

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட போஸ்டரில் மற்ற நடிகர்களின் பெயர்கள் இருக்கும் போது ஏன் நாயகி பெயர் மட்டும் விடுபட்டிருக்கிறது? இது நியாயமே இல்லை என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
“விஸ்வநாத் & சன்ஸ்” பட போஸ்டரில் நாயகி பெயர் ஏன் இடம்பெறவில்லை? - நடிகை சனம் ஷெட்டி
Published on

சென்னை,

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ நேற்று வெளியாகியிருந்தது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட போஸ்டரில் நாயகி மமிதா பைஜூ பெயர் இடம் பெறவில்லை. இதனால் நடிகை சனம் ஷெட்டி ஏன் நாயகி பெயர் இடம் பெறவில்லை என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி தனது டிவிட்டர் பதிவில், “போஸ்டரில் நாயகி பெயர் ஏன் போடவில்லை? மற்ற நடிகர்களின் பெயர்கள் இருக்கும் போது ஏன் அவர் பெயர் மட்டும் விடுபட்டிருக்கிறது? இது நியாயமே இல்லை, இந்த நடைமுறையை மாற்ற வேண்டிய நேரம் இது. மமிதா பைஜூ, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளதால்தான் அவர் இவ்வளவு பெரிய படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்படுகிறார். ஒருவேளை அவர் அறிமுக நடிகையாக இருந்திருந்தாலும் கூட, சமமான அங்கீகாரம் பெற உரிமை உடையவர். சினிமா வளர்ச்சியடைய வேண்டும். ஒவ்வொன்றாக மாற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

"மிஸ் சவுத் இந்தியா" அழகி சனம் ஷெட்டி

பெங்களூருவில் பிறந்து வளர்ந்து, மாடலிங் துறையில் நுழைந்து, 2016-ம் ஆண்டில் "மிஸ் சவுத் இந்தியா" அழகியாக வெற்றிபெற்று கலக்கியவர் சனம் ஷெட்டி. தமிழில் 'அம்புலி', 'கதம் கதம்', 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட் டான்', 'வால்டர்', 'ஊமை செந்நாய்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மேலும் பிரபலமான சனம் ஷெட்டி, சினிமா துறையில் பாலியல் புகார்கள் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com