

ஐதராபாத்,
'ராக்கா' திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. உலகின் முன்னணி விஎப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருகிறது. இப்படம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ராக்கா படம் குறித்த அப்டேட் ஏதும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுன் பங்கேற்றார். அப்போது ராக்கா அப்டேட் தாமதம் ஏன்? என்றும், எப்போது அப்டேட் வெளியாகும் எனவும் கேட்ட கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் பதிலளித்து பேசியதாவது;
”'ராக்கா' படம் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதமாகியுள்ளதை தான் நன்கு அறிவேன். தாமதமானாலும் படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படாது. "நாங்கள் எப்போது அப்டேட் கொடுத்தாலும் அது சினிமா வட்டாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்க படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. ரசிகர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு மிகச்சிறந்த படைப்பை தருவோம். ரசிகர்கள் காட்டி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் பொறுமைக்கும் அவர் தனது நன்றி.”
இவ்வாறு அவர் கூறினார்.