'ஜனநாயகன்' படம் வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்குமா?- அர்ச்சனா பட்நாயக் பதில்

'ஜனநாயகன்' பட வெளியீடு குறித்த சில கேள்விகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் நிருபர்கள் கேட்டனர்.
'ஜனநாயகன்' படம் வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்குமா?- அர்ச்சனா பட்நாயக் பதில்
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்து விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஜனநாயகன் பட வெளியீடு குறித்த சில கேள்விகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிரித்தபடி பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், “பிரிவியூ காட்சி போட வேண்டுமா? நான் தமிழ் கற்றுக் கொண்டதே சினிமாக்களை பார்த்துதான். அப்படி பார்த்த முதல் படம் சாமி" என்று கூறினார். பின்னர் டெல்லியில் தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது ஒரு கட்சித் தலைவர் நடித்த படத்தை வெளியிடலாமா? அதில் எம்.சி.எம்.சி.யின் (சமூகவலைத்தளம், செய்தித்தாள் உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டிய அரசியல் விளம்பரங்களுக்கு சான்றளிக்கும் குழு) நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதற்கு விளக்கம் வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை கூறுங்கள்? என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com