'ஜவான்' படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையுமா? - ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

ஷாருக்கானின் தற்போதைய பதிவு, மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
'ஜவான்' படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையுமா? - ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
Published on: 

ஷாருக்கான் வெளியிட்டிருந்த பதிவில், "நமது படப்பிடிப்பின்போது இருந்த சுவாரசியமான நாட்களை இப்போதும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன். விரைவில் மீண்டும் இணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான அட்லி, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அட்லி

சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கானுக்கு, இயக்குநர் அட்லி சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்தப் பதிவில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'து மில் ஜாயே' பாடல் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டியிருந்தார்.

மேலும், "நீங்கள் எனக்கு வழிகாட்டியாகவும், மிகப்பெரிய உத்வேகமாகவும் திகழ்கிறீர்கள். உங்களுடன் பணியாற்றிய காலம் சினிமாவைப் பற்றி மட்டுமல்லாமல், வாழ்க்கை மற்றும் எளிமையாக இருப்பது குறித்தும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அட்லிக்கு ஷாருக்கான் பதில்

அட்லியின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த ஷாருக்கான், "நன்றி... என் ஜவான். நமது படப்பிடிப்பின்போது இருந்த சுவாரசியமான நாட்களை இப்போதும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன். விரைவில் மீண்டும் இணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கானின் இந்தப் பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்க விரும்புவதை அவர் வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் இணையுமா வெற்றிக் கூட்டணி?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ.1,150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும், ஷாருக்கானின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை எனப் பல அம்சங்களால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ஷாருக்கானின் தற்போதைய பதிவு, மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருவரும் இணைந்து அடுத்ததாக எந்த மாதிரியான கதையைத் தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும், புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

X