

'திரிஷ்யம் 3' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. மோகன்லால் நடித்த இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும்போது, மூன்றாம் பாகத்தில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்துள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும், 'திரிஷ்யம்' தொடர் இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான திரில்லர் படங்களில் ஒன்றாக தொடர்ந்து பார்க்கப்படுகிறது.
கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், 'திரிஷ்யம் 3' திரைப்படம் உலகம் முழுவதும் 14 நாட்களுக்குள் ரூ.226.55 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. மேலும், மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த முதல் 5 திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. திரிஷயம் படத்தின் 4 வது பாகம் உருவாகுமா? என ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் அடுத்த பாகத்தின் கதை எப்படி அமையும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் மற்றும் கணிப்புகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 'திரிஷ்யம் 4' குறித்து ஜீத்து ஜோசப் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து ஜீத்து ஜோசப் கூறுகையில், “தற்போது நான்காவது பாகத்திற்கான பொருத்தமான கதை தன்னிடம் இல்லை என்பதால், அந்த படம் நிச்சயமாக உருவாகும் என்று இப்போதைக்கு உறுதி அளிக்க முடியாது” என்றார். மேலும், 'திரிஷ்யம் 3' படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான ஹிண்ட் கொடுப்பது போல, போஸ்ட்-கிரெடிட் காட்சியை சேர்த்தது ஏன் என்பது பற்றியும் விளக்கம் அளித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், “ஒருவர் ஒரு நோக்கத்துடன் பணியில் ஈடுபட்டால், அதற்கான முடிவை நாம் எதிர்பார்ப்போம். ஆஷா ஷரத் மற்றும் சித்திக் நடித்த கதாபாத்திரங்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கியபோது, அவர்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றார்கள். அவர்கள் உண்மையில் வெற்றி பெற்றார்களா என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில்தான் அந்த போஸ்ட்-கிரெடிட் காட்சி சேர்க்கப்பட்டது”என்றார்.