

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. திருநெல்வேலி முத்துராம் தியேட்டர் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய் அரசியலுக்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவில் வெற்றிடம் இருக்கா? என்ற கேள்விக்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
“வெற்றிடம் எல்லாம் கிடையாது. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது; விஜய் சார் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் இருக்காங்க; சூர்யா சார் மாதிரி நிறைய ஸ்டார்கள் இருக்காங்க; எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.