

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய்க்கிழவி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் உள்ள செல்லூர் கோபுரம் திரையரஙகில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா உள்ளிட்டோர் படம் பார்த்தனர்.
அதன் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது பான் இந்தியாதான். கல்லூரிக்கு போகாமல் பட்டப்படிப்பு படிக்காமல் குடும்ப நிர்வாகத்தை பார்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.எனக்கு இடையூறு தருபவர்கள் யார் என எல்லோரும் கேட்கிறார்கள். அதை வெளியில் சொன்னால் யூடியூபில் அதிக வியூஸ்தான் கிடைக்கும். மற்றவர்களை குறை சொல்வதற்காக நான் இதுபோன்ற கருத்துகளை சொல்லவில்லை. இதையெல்லாம் தாண்டிதான் ஒரு திரைப்படத்தினை உருவாக்குகிறோம் என சொல்கிறேன். படத்தில் அரசியலை பற்றிப் பேசுவோமே தவிர, நிஜத்தில் அரசியல் பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும். நல்ல தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என சிவகார்த்திகேயன் கூறினார்.
தொடர்ந்து, ''சினிமாவில் பொழுதுபோக்கு தாண்டி அரசியல் கருத்து அதிகளவில் புகுத்தப்படுகிறது என நினைக்கிறீர்களா?'' என்ற கேள்விக்கு, ''எல்லா காலகட்டத்திலும் அரசியல் இருந்துள்ளது. அது தவறு ஒன்றும் இல்லை. '' என பதில் அளித்தார்.
''நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா?'' என்ற கேள்விக்கு, ''நான் சிறிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய நிறுவனமாக நான் வளரவில்லை. ஒருவேளை நடிகர் அஜித் ஒப்புக் கொண்டார் என்றால், சிறப்பாக அந்த பணியையும் செய்வேன். அந்த திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக தான் இருக்கும். அது ஒரு கனவு தான்'' என்றார்.
அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால், இன்னமும் படத்திற்கு தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை. இப்படத்தில் மோகன்லால் இணையவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.