

பூ, டிஷ்யூம், பிச்சைக்காரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘நூறுசாமி’. இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலர் கலந்துகொண்டு இயக்குநர் சசியுடனான தங்களது நீண்ட கால நட்பு குறித்துப் பகிர்ந்து கொண்டனர். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘நூறுசாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
நிகழ்வில் இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், “நான் பிறந்த ஊரில் நடந்த நிஜக் கதைதான் இந்த ‘நூறு சாமி’ திரைப்படம். ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்ததற்காக ஒரு பெரிய ஹீரோவின் வாய்ப்பை இழந்தார் சசி.
சுவாசிகா இப்படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். இந்த வருடம் அதிக விருதுகளை வெல்ல ‘தாய்க்கிழவி’ படத்திற்காக ராதிகா அவர்களுக்கும் ‘நூறு சாமி’ படத்திற்காக சுவாசிகா ஆகிய இருவருக்கும் தான் போட்டியாக இருக்கும். எனக்கு முன்பே சசி இயக்குனர் ஆகிவிட்டார். ஒருநாள் சசியிடம் நான் திரைப்படம் பண்ண போகிறேன் என தெரிவித்தேன்.
வேலையை விட்டு இயக்குநர் வாய்ப்பு தேடுகிறாய், பசியோடு மட்டும் இருந்துவிடாதே. உனக்கு எப்போது என்ன தேவை என்றாலும் என்னை அணுகலாம், நான் பண உதவி செய்கிறேன் என்றார். நாம் உதவி கேட்கும் சூழல் வருகிறதோ, இல்லையோ ஆனால் நம்மை பசியோடு வாடவிடாமல் உதவ ஒருவர் இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய தைரியம். அந்த சந்தோஷத்தை நான் கஷ்டப்படும் நேரத்தில் எனக்கு கொடுத்தார்.
‘தீனா’ திரைப்படத்தை பாதியில் கைவிடலாம் என முடிவெடுக்கும் நேரத்தில், சசியை சந்தித்தேன். அவர் எனக்கு வாழ்த்துக்கள் கூறினார். ஆனால் நான் இப்படம் நடக்காது என்றேன், படத்தில் சில விஷயங்கள் எனக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் படம் நடப்பதில் சிக்கல் உள்ளது என தெரிவித்தேன். ‘படம் எடுக்க முடியவில்லை என விலகினால் அதுவே தோல்விக்கு சமம், எனவே முடிந்தவரை போராடு நமக்கு 70% படம் சரியாக வருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு 100% சரியாக இருக்கும்’ என ஊக்கப்படுத்தினார். ‘தீனா’ படத்தை தொடர சசிதான் காரணம்.” என முருகதாஸ் கூறினார்.