பெண்கள் சபரிமலை செல்வதை ஆதரித்த டைரக்டர் மீது சாணத்தை கரைத்து வீசி தாக்குதல்

பிரபல மலையாள டைரக்டர் பிரியநந்தனன் (வயது 53). இவர் நெய்துகரன், புலி ஜன்மம், சுபி பரஞ்ச கதா, பதிரகாலம் உள்பட பல மலையாள படங்களை டைரக்டு செய்துள்ளார். புலி ஜன்மம் படத்துக்கு 2006-ம் ஆண்டு தேசிய விருது கிடைத்தது. ரெட் ஒயின் உள்பட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
பெண்கள் சபரிமலை செல்வதை ஆதரித்த டைரக்டர் மீது சாணத்தை கரைத்து வீசி தாக்குதல்
Published on

சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு ஆதரவாக பிரியநந்தனன் பேசி வந்தார். தனது முகநூல் பக்கத்திலும் சபரிமலைக்கு செல்லும் பெண்கள் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பதிவிட்டு இருந்தார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. சில தினங்களுக்கு முன் மத உணர்வை புண்படுத்தியதாக சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர்கள் பிரியநந்தனன் வீட்டின் முன்னால் போராட்டம் நடத்தினார்கள்.

எதிர்ப்பு காரணமாக தனது முகநூல் பதிவை அவர் நீக்கினார். இந்த நிலையில் நேற்று காலை திருச்சூர் மாவட்டம் வெள்ளசிரா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு பிரியநந்தனன் சென்றார். அப்போது சிலர் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை அவர் மீது வீசி தாக்கினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அவர்கள் மீது போலீசில் புகார் செய்வேன் என்றும் பிரியநந்தனன் தெரிவித்தார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com